சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, இந்த வைரஸ் உருவானது குறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்தன. இதுதொடர்பாக, அமெரிக்காவில் பிரபலமான `ஸீரோ ஹெட்ஜ்' என்கிற வலைதளம் வெளியிட்ட Is This the Man Behind the Global Coronavirus Pandemic என்கிற கட்டுரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸீரோ ஹெட்ஜ் என்ற வலைதளம் இந்தக் கட்டுரையை கடந்த புதன்கிழமை தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, "வைரஸ் பரவுவதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம், கொரோனா வைரஸின் ஆயுதமாக்கப்பட்ட வெர்சன்தான். சீனாவின் வுஹான் வைராலஜி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளை இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்கிறது. இதுதான் உலக பொதுசுகாதார நிறுவனத்தை அவரசரநிலையை பிரகடனப்படுத்த வழிவகுத்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, கொரோனா வைரஸை பயோ வெப்பனாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்ற சர்ச்சையும் எழுந்தது.
வைரஸ் குறித்த அறிவியல் விளக்கங்களை விவரிக்கும் அந்த கட்டுரையின் முடிவில், சீனா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ள இந்த கொரோனா வைரஸ் உருவான காரணத்தை தெரிந்துகொள்ள வுஹான் வைராலஜி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியை அணுகுங்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவருடைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் பதிவிட்டுள்ளனர். ஆனால், வுஹான் ஆய்வகம்தான் இந்த வைரஸை பரப்பியது என்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தக் கட்டுரை ஆராய்ச்சியாளர்களிடையே மிகப்பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. இதுதொடர்பாக வுஹான் வைராலஜி நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் வௌவால்கள் ஏன் பாதிப்படைவதில்லை என்பதை விஞ்ஞானி ஜாவ் பெங் ஆய்வு செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜாவ் பெங் கடந்து வந்த பாதை மற்றும் அவரது ஆராய்ச்சி துறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
கல்ஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் உலக சுகாதார குழுவின் உறுப்பினருமான பிரான்டன் ஜெ. ப்ரௌன் இந்த கட்டுரை தொடர்பாக பேசுகையில், ``வுஹான் நிறுவனம், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காகவே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பயோ வெப்பனாக பணிபுரியும் என்கிற சிந்தனையே வேடிக்கையாக உள்ளது. மற்ற வைரஸ் தாக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிகக்குறைவு. எனவே, இது பயோ வெப்பன் என்று கூறப்படுவது சரியானதல்ல" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள உயிரியல் அறிவியல் பள்ளி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திய விஞ்ஞானிகள் குழு ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்விலும் சில சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
![நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F3ab747ad-4a8c-437e-bce8-bae9ba340cb2%2Fscreenshot_2020_02_01_at_091618.png?w=640&auto=format%2Ccompress)
ஸீரோ ஹெட்ஜின் முகநூல் பக்கத்தில் 50,000 மற்றும் ட்விட்டரில் 6,70,000 ஃபாலோயர்கள் உள்ளனர். இந்தக் கட்டுரையை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் நெட்டிசன்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸீரோ ஹெட்ஜின் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ``தனிநபரின் விவரங்களைப் பதிவிட்டு ட்விட்டரின் கொள்கைகளை மீறியதற்காக நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.