Medical Usages of our natural all neem Plants in tamil - Home Remidy - HybridAnalyzer Tamil

Hot

Thursday, 15 February 2018

Medical Usages of our natural all neem Plants in tamil - Home Remidy

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். வேம்பு வகைகளில் ஒன்றான ‘நிலவேம்பு’ குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் பிற வகைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

சிவனார் வேம்பு

இதை, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான இடங்களில் பெருமளவு வளர்ந்திருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் உள்ள இடத்தில் இச்செடியும் இருக்கும். தவிர, இது பனைத்தொழிலோடும் சம்பந்தப்பட்ட செடியாகும். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சுவதற்கு இச்செடியை எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள். இதைப் பறித்த அன்றே கட்டாகக் கட்டி எரிக்க முடியும். அதனால், இதை ‘அன்று எரிந்தான் பூண்டு’ என்று அழைத்துள்ளனர். அது மருவி ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ ஆகிவிட்டது.

தமிழகத்தின் வறட்சி நிலங்களில் பனை-உடை-ஆடு என்னும் உயிர்ச்சூழல் நிலவியது. உயர்ந்த பனைமரம், அதற்குக் கீழ் குடை பரப்பி நின்ற உடைமரங்கள், அதன் கீழ் ஆடுவளர்ப்பு என இந்த உயிர்ச்சூழல் நிலவிய காலங்களில் ஆண்டின் 12 மாதங்களும் மக்களுக்கு பொருளாதாரப் பலன் கிடைத்தது. இந்தப் பனை, உடை, ஆடு எனும் அற்புதமான உயிர்ச்சூழல், வேலிக்கருவை மரங்களாலும் ரசாயன விவசாய முறையாலும் கெடுக்கப்பட்டது. இதனால், மண்ணின் வளம் குன்றி அரிய வகை சிவனார் வேம்பு உள்ளிட்ட மூலிகைகள் அருகி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
சிவனார் வேம்பின் வேர்தான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுகிறது. இது ‘ஒரு பருவத் தாவரம்’ என்பதால் வேரைச் சேகரிப்பதால் சூழல் பாதிப்புக் கிடையாது. இந்த வேரை சிறுதுண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து... நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சொறி, சிரங்குகளின் மேல் பூசினால் சிறப்பான பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவ மருந்துக் கடைகளில், ‘சிவனார் வேம்புக் குழித் தைலம்’ மற்றும் ‘சிவனார் வேம்பு சூரணம்’ என்ற மருந்துகள் கிடைக்கும். இவற்றை உள் மருந்தாக எடுத்துக்கொண்டால், நாள்பட்ட முற்றிய தோல் நோய்கள்கூட குணமாகும். இம்மருந்துகளால் வெண்புள்ளி, குஷ்ட நோய் தேமல்கள் ஆகியவை குணமானதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், இம்மருந்துகளைச் சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேம்பு

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி், பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலைதான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத் தாளிக்க மட்டுமே பயன்படுத்தினால் முழுப்பயன் கிடைக்காது. அதனால், உணவுத்தட்டில் இருந்து இதைத் தூக்கி எறியாமல் கண்டிப்பாக உண்ண வேண்டும். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும்.
முன்பு குழந்தைகளைக் குளிப்பாட்டிய உடன் ‘உரப்பு மருந்து’ எனும் மருந்தை குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள். சிறிது கறிவேப்பிலை, 2 மிளகு ஆகியவற்றை நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைப்பதுதான் உரப்பு மருந்து. தினமும் இதை குழந்தைகளின் நாக்கில் தடவிவந்தால், செரிமான சக்தி அதிகரிப்பதுடன், வயிறு சம்பந்தமான பிணிகள் வராமல் தடுக்கப்படும். சோகை நோயும் தடுக்கப்படுவதோடு, கண்பார்வை வளமாகும். தோல் பளபளப்பாகும். இப்பழக்கத்தை விட்டுவிட்டு... ‘கிரைப் வாட்டர்’ என்ற பெயரில் கண்டதையும் கொடுத்து வருவது காலக் கொடுமை.

சித்த மருத்துவத்தின்படி, செரிமானக் கோளாறால் வயிற்றில் ஏற்படும் வாயுதான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. ‘வாயு முத்தினால் வாதம்’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. கறிவேப்பிலையில் தயாரிக்கப்படும் அன்னப்பொடிக்கு வாயுப் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி உண்டு. கறிவேப்பிலைத்தூள் 70 கிராம், சுக்கு, மிளகு, ஓமம், காயப்பொடி, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் வகைக்கு 10 கிராம், இந்துப்பு 5 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்தால் அன்னப்பொடி தயார். இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிடும்போதும், சுடு சோற்றில் ஒரு தேக்கரண்டி அன்னப்பொடி போட்டு சிறிது பசுநெய்விட்டுப் பிசைந்து மூன்று கவளம் சாப்பிட்டு வந்தால் வாய்வு, ஏப்பம், வயிற்றிரைச்சல், வயிற்றுப்புண் பிரச்னைகள் வரவே வராது. ஆண்டுக்கணக்கில் வயிற்றுப்புண்ணுக்காக மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள்கூட அன்னப்பொடி மூலம் விரைவில் குணமடைய முடியும். கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி இடித்துத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பச்சிளம் குழந்தைகளுக்குப் புகட்டினால், பால் வாந்தி நிற்கும்.

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில் இதை ஒத்திருக்கும் துளுக்க வேம்பை, மலைவேம்பு எனக் கருதுவதுண்டு. ஆனால், துளுக்க வேம்பில் நீல நிறப் பூக்கள் பூப்பதை வைத்து எளிதாக இனம் காணலாம். இது இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தமையால், துளுக்க வேம்பு என அழைக்கப்படுகிறது. மலைவேம்பு வணிக ரீதியாகப் பலன் கொடுப்பதால் பல பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகிறது.

கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கும் அருமருந்து மலைவேம்பு. மலைவேம்பின் இலைகளை நன்கு அரைத்து, துவையல் பதத்தில் ஒரு நெல்லிக்காயளவு (3 கிராம்) மாதவிலக்கு ஆன 2, 3, 4-ம் நாட்களில் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். இம்மருந்து சாப்பிடும் நாட்களில் உப்பைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்கள் இதைக் கடைப்பிடித்தால் கருத்தரிப்புப் பிரச்னைகள், கருப்பைக் கட்டிகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு ஆகியவை குணமாகும்.
‘தேரையர் தைல வர்க்கச்சுருக்கம்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கலிங்காகித் தைலம்’ தயாரிப்பில் மலைவேம்புச் சாறு பயன்படுத்தப்படுகிறது. இத்தைலம், மாதவிடாய் மற்றும் கருப்பை நோய்களைக் குணமாக்கும். இத்தைலத்தைச் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மலைவேம்பு இலைகளை அப்படியே அரைத்து, தலையில் பற்று போட்டு அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் பேன், பொடுகு போன்றவை ஒழியும். ஒரு வாரம் தொடர்ந்து பற்றுப் போட்டு குளிக்க வேண்டும்.

வேம்பு

வேம்பின் பயன்கள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், சில விஷயங்களை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். வேம்பு என்றாலே அது பூவைக் குறிப்பதுதான். மாசி, பங்குனி மாதங்களில் வேப்பமரத்தைச் சுற்றிலும் நிறைய வேப்பம்பூ விழுந்து கிடக்கும். மரத்தைச் சுற்றி சுத்தமான வெள்ளைத்துணியை விரித்து அதில் பூவைச் சேகரித்து நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். உணவுக்கு ரசம் சமைக்கும்போது அதில் வேப்பம்பூப் பொடியையும் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்... சுவையின்மை, வாந்தி, ஏப்பம் முதலியன குணமாகும். இந்த ரசத்தைச் சாதத்துடனோ அல்லது தனியாகவோ உண்ணலாம்.
அம்மைநோய்க் கொப்புளங்களின் மீது வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் போட்டால் குணமாகும். அம்மை நோயின் வெம்மை, உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் கண் ஆகியவற்றைப் பாதிக்காமல் இருக்க... வேப்பங்கொழுந்துடன் அதிமதுரப் பொடி சேர்த்து அரைத்துச் சுண்டைக்காயளவு உருட்டி மூன்று வேளை உணவுக்குப் பிறகும் உண்டு வர வேண்டும். இப்படி 7 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

வேப்பிலையைத் துளிர்களோடு சேர்த்துப் பறித்து நிழலில் காயவைத்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். பொடியின் அளவில் பாதி அளவில் ஓமம், சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இடித்துச் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பெயர் வேம்பு கற்பம். இப்பொடியை காலை, மாலை உணவுக்குப் பிறகு 3 கிராம் அளவு எடுத்து உண்டு வந்தால்... கண்ணில் இருக்கும் படல மறைப்பு, புழுவெட்டு ஆகியவை குணமாகும். மஞ்சள் காமாலை நோயில் இருந்து மீண்டவர்கள் இதை மூன்று மாதங்கள் உண்டு வர... களைப்பு, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
வேப்பிலை, ஈர்க்கு, கொழுந்து, பூ, காய், காயின் பால், பழம், விதை, வித்தெண்ணெய், பிண்ணாக்கு, பட்டை, வேர், வேர்ப்பட்டை அனைத்துமே சிறந்த மருத்துவக் குணம் வாய்ந்தவை.
இழந்த மரங்கள் எண்ணற்றவை!
வேம்பில்... கருவேம்பு, சந்தனவேம்பு, சுந்தரவேம்பு, நாய்வேம்பு, வெடிவேம்பு, மதகரிவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல ரகங்கள் உள்ளன.
இவற்றில் சர்க்கரை வேம்பு குறித்துக் ‘குணபாடம் மூலிகை’ எனும் நூலில் க.ச.முருகேச முதலியார், “1886-87-ம் ஆண்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம் மன்றோ சிலைக்கு மேற்புறச்சாலையில் ஒரு மரம் இருந்தது. இம்மரத்தின் இலை இனிப்பாயிருந்ததைக் காண, வெகுசனங்கள் அங்குத் தினந்தோறும் கூடுவதைக் கண்ட அதிகாரிகள் அம்மரத்தை வெட்டிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி நாம் இழந்த மரங்கள் எண்ணிக்கையில் அடங்காது.
சித்தர்களால் அருளப்பட்ட மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூலிகைகள் குறித்த கருத்துகள் மற்றும் மக்கள் வழக்கத்தில் இருந்த மூலிகை மருந்து செய்முறைகள் ஆகியவற்றைத் தொகுத்து... 1936-ம் ஆண்டு ‘குணபாடம் மூலிகை’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளார், க.ச.முருகேச முதலியார். இந்த நூல் இன்றளவும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மூலிகைக்கான பாடநூலாக விளங்குகிறது.

சர்க்கரை வேம்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்குச் செழிய நல்லூரில் உள்ள காளியம்மன் கோவிலிலும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள்ளும் உள்ள ஒரு வகை வேப்ப மரத்தை, சர்க்கரை வேம்பு என்கிறார்கள். ஆனால், அம்மரத்தின் இலைகள் இனிக்கவில்லை. ஆனால், கசப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. தவிர, கொத்தமல்லிப் பூப்போலப் பூக்கிற ஒரு சிறு செடியையும் சர்க்கரை வேம்பு என்கிறார்கள்.
இதன் இலைகள் இனிக்கும். ஆனால், இதுவும் சர்க்கரை வேம்பு அல்ல. இச்செடியை கேரள மக்கள் ‘கல்லுருக்கி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதை, சிறுநீரகக் கற்களைக் கரைக்கப் பயன்படுத்தி வருகிறார்கள்.






all type of neem tree details and health remidys in tamil

No comments:

Post a Comment