திண்டுக்கல் மாவட்டத்தின், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி
என்னும் ஊரைச் சேர்ந்த W.P.A.சவுந்தரபாண்டியன் என்ற தொழிலதிபரின் பெயரால், பாண்டியன் கடைத் தெரு என்று வழங்கப்பட்டு, இப்போது பாண்டி
பஜார் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சாலை, சென்னையின்
முக்கிய அங்காடித் தெருக்களில் ஒன்று.
தியாகராயா சாலை என்று அழைக்கப்படும் இந்தச்
சாலையில் இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்கள் அக்காலச் சென்னையின் மீதமிருக்கும்
பசுமை அடையாளங்கள்.
பாண்டி பஜாரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, நாயுடு ஹால்
நிறுவனம். இதன் உரிமையாளர் எம்.கோவிந்தசாமி நாயுடு. இவர் ஆரம்பத்தில், டெய்லர் கடை நடத்தி வந்தார்.
தொழிலில் வளர்ச்சியடைந்த அவர், பாண்டி பஜாரில் இப்போது நாயுடு ஹால் இருக்கும் இடத்தில்,மகளிர் மட்டும் என்ற கடையைத் தொடங்கினார். இந்தக் கடையில், மகளிர்களுக்குத் தேவையான உள்ளாடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிறுவனம்தான்
பின்னர், 'நாயுடு ஹால்' என்ற பெயர்
மாற்றத்தைப் பெற்றது.
பாண்டி பஜாரின் மற்றொரு முக்கிய அடையாளம், ஹோலி ஏஞ்சல்ஸ்
ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி. இரண்டாம் உலகப் போரின்போது, கடற்கரை அருகே இருந்த உயர் நீதிமன்றக் கட்டடத்தின்மீது குண்டு வீசலாம் என்று
அச்சம் இருந்தது (ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டு வீசியது). இதனால், உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இப் பள்ளியில் இயங்கியது.
பாண்டி பஜாரின் பழைய அடையாளங்களாக இருந்தவற்றில், தமிழகத்தின் முதல் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி அவர்களின், ராஜகுமாரி திரையரங்குகமும் ஒன்று. இன்று அத்திரையரங்கம் வணிக வளாகமாக
மாறிவிட்டது. இது, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்
பள்ளிக்கு அருகில் இருந்தது. அந்தக் காலத்தில், ஆங்கிலத்
திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்கமாக ராஜகுமாரி இருந்தது.
மற்றொரு திரையரங்கம், தமிழகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த நகைச்சுவை
நடிகர் திரு நாகேஷ் அவர்களின், நாகேஷ் தியேட்டரும் ஒன்று. இத் திரையரங்கம்
தற்போது திருமண மண்டபமாக மாறிவிட்டது.
மிக மிக முக்கியமான அடையாளங்கள் இப்பகுதியில் இயங்கி வரும் (தி.நகரில் மட்டும்
40-க்கும் மேற்பட்ட) பதிப்பகங்கள்தான். பாண்டி
பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என
தியாகராய நகர் உட்புறச் சாலைகள் பலவற்றில் இந்தப் பதிப்பகங்கள் செயல்படுகின்றன.
பாண்டி பஜாருக்கு அருகில் உள்ள தெருக்களில் மட்டும் பத்து பதிப்பகங்களுக்கு மேல்
உள்ளன.
No comments:
Post a Comment